286 நாட்கள் விண்வெளியில் கழித்துவிட்டு பூமிக்குத் திரும்பியுள்ளனர் இந்திய வம்சாவளி விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ், அமெரிக்க விண்வெளி வீரர் பேரி வில்மோர் உள்ளிட்ட 4 பேர். ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் டிராகன் விண்கலம் மூலம் அவர்கள் பத்திரமாக பூமிக்குத் திரும்பியுள்ளனர். இந்திய நேரப்படி அதிகாலை 3:40 மணிக்கு தங்களின் விண்வெளிப் பயணத்தை நிறைவு செய்துள்ளனர்.
மெக்சிகோ வளைகுடாவில் பாதுகாப்பான தரையிறக்கம்
சுனிதா வில்லியம்ஸ், பேரி வில்மோர் மற்றும் சக விண்வெளி வீரர்களான நிக் ஹேக் மற்றும் அலெக்சாண்டர் கோர்புனோவ் ஆகியோரையும் ஏற்றிச் சென்ற ஸ்பேஸ்எக்ஸ் டிராகன் க்ரூ-9 காப்ஸ்யூல், புளோரிடாவின் டல்லாஹஸ்ஸி கடற்கரைக்கு அருகிலுள்ள மெக்சிகோ வளைகுடாவில் வெற்றிகரமாக தரையிறங்கியது. மீட்பு செயல்முறையை கடற்படை சீல்களின் பாதுகாப்புக் குழு மிக நுணுக்கமாகக் கையாண்டது. காப்ஸ்யூலை மீட்புக் கப்பலுக்கு மாற்றுவதற்கு முன்பாக்க ஆய்வு செய்யப்பட்டது.
அதிகாலை 4:25 மணியளவில், சுனிதா வில்லியம்ஸ் உட்பட விண்வெளி வீரர்கள் காப்ஸ்யூலில் இருந்து பிரித்தெடுக்கப்பட்டு, சுகாதார பரிசோதனைகளுக்காக ஒரு சிறப்பு மருத்துவ வசதிக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இதனைத் தொடர்ந்து, அவர்கள் ஹெலிகாப்டர் மூலம் நாசாவின் ஹூஸ்டன் மையத்திற்கு மேலும், சில மருத்துவ பரிசோதனைகள் மற்றும் விளக்கங்களுக்காக கொண்டு செல்லப்பட்டனர்.
8 நாட்கள் பயணம் 9 மாதங்கள் ஆனதற்கான காரணம்
சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகியோர் கடந்த ஆண்டு ஜூன் மாதம் சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு (ISS) எட்டு நாள் பயணத்தை மேற்கொண்டனர். ஆனான, அவர்களின் விண்கலம் ஸ்டார்லைனரில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்படவே சுனிதா, வில்மோர் அங்கேயே தங்கும் நிலை ஏற்பட்டது. 8 நாட்கள் பயணம் 9 மாதங்களானது இதனால் தான். இந்த 286 நாட்களில் சுனிதாவும், வில்மோரும் விண்வெளியில் 121 மில்லியன் ஸ்டாட்யூட் மைல் பயணித்துள்ளனர். ஒரு ஸ்டாட்யூட் மைல் என்பது கிட்டத்தட்ட 5280 அடி எனக் கொள்ளலாம்.
இந்நிலையில் அவர்கள் பாதுகாப்பாக தரையிறங்கியுள்ளது நாசா மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனங்களுக்கு ஒரு குறிப்பிடத்தக்க சாதனையாகும். இது வணிக விண்வெளி பயணத்தின் திறன்களை வலுப்படுத்துகிறது மற்றும் நீட்டிக்கப்பட்ட விண்வெளி பயணங்களில் விண்வெளி வீரர்கள் எதிர்கொள்ளும் சவால்களையும் எடுத்துக்காட்டுகிறது.
After nine months in space, NASA astronauts Sunita Williams and Butch Wilmore safely returned to Earth aboard SpaceX Crew-9, landing in the Gulf of Mexico.