சென்னையில் பிரபலமான உதயம் திரையரங்கம் தற்போது நிரந்தரமாக மூடப்பட்டுள்ளது. அங்கு தியேட்டர் கட்டிடத்தை இடிக்கும் பணிகள் துவங்கப்பட்டு பிரபலமான அடுக்குமாடி குடியிருப்பு வர இருப்பதாக கடந்த சில மாதங்களுக்கு முன்பே தெரிவிக்கப்பட்டு இருந்தது. இதற்கான முதற்கட்டப் பணிகள் அனைத்தும் தற்போது துவங்கப்பட்டுள்ளன. உதயம் திரையரங்குகள் செயல்படாதது அதற்கு அருகில் உள்ள வியாபாரிகள் அனைவரையும் பெரும் சோகத்தில் ஆழ்த்துயுள்ளது.

கடந்த 1983 ஆம் ஆண்டு துவங்கப்பட்டு உதயம் திரையரங்கம், சென்னையில் மிக வெற்றிகரமாக செயல்பட்ட பெரிய திரையரங்கங்களில் ஒன்று. கட்டப்பட்டபோது உதயம், சூரியன், சந்திரன் ஆகிய மூன்று திரைகளை கொண்டு செயல்பட்டது. பின்னாட்களில் சொத்துப் பிரச்சினை காரணமாக உதயம் தியேட்டர் இரண்டாக பிரிக்கப்பட்டது. அத்துடன் மினி உதயம் என்ற பெயரில் கூடுதலாக ஒரு திரை சேர்க்கப்பட்டது.
மல்டி பிளக்ஸ் தியேட்டர்கள் பெரியளவில் கால் பதிக்காத காலக்கட்டங்களில் சென்னை ரசிகர்கள் கொண்டாடும் திரையரங்கங்களில் ஒன்றாக உதயம் திகழ்ந்தது குறிப்பிடத்தக்கது. 90 ஆம் ஆண்டுகளுக்கு பிறகு இந்த திரையரங்கம் விஜய், அஜித் ரசிகர்களின் கோட்டையாக மாறியது. அவர்களுக்கு ஏராளமான வெற்றி படங்களை கொடுத்துள்ளது. மேலும் அவர்களின் படங்கள் இங்கு வெள்ளி விழா கண்டதன் பெருமை அவர்களது ரசிகர்களை சேரும்.
அதேபோல சென்னையில் நல்ல வசூல் செய்து நடக்கும் திரையரங்குகளில் ஒன்றாகவும் உதயம் திரையரங்கம் திகழ்ந்தது. சென்னையில் மல்டி பிளக்ஸ் திரையரங்குகள் வந்த பிறகு உதயம் போன்ற தியேட்டர்களின் மவுசு என்பது மிகவும் குறையத் துவங்கியது. சென்னை சினிமா கலாச்சாரத்தின் ஓர் அங்கமாக 40 ஆண்டு காலமாக பல எண்ணற்ற நினைவுகளை சுமந்து நிற்கும் உதயம் திரையரங்கம் மூடப்பட்டது சினிமா ரசிகர்கள் அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
Udayam Theatre, a cultural icon of Chennai for 40 years, has closed its doors. From Rajinikanth’s classics to Kamal Haasan’s hits, the iconic theatre was a hub for movie lovers.
