இந்த ஆண்டின் தொடக்கத்தில், உலகின் பில்லியனர்கள் பட்டியலை போர்ப்ஸ் வெளியிட்டது. இந்த பட்டியலில் இடம் பிடித்துள்ள ஷிவ் நாடார் பணக்கார தொழிலதிபர் மற்றும் கொடையாளர்கள் பட்டியலில் முதலிடத்தில் இருப்பவர் ஆவார். இவரின் நிகர சொத்து மதிப்பு $35.6 பில்லியன் அதாபது தோராயமாக ரூ.2,97,990 கோடி.
இந்திய அளவில் மிக முக்கியமான ஐடி நிறுவனமாக திகழ்ந்து கொண்டிருக்கிறது HCL. இதன் நிறுவனர் ஷிவ் நாடார் என்பதை பலரும் அறிந்து வைத்திருப்பர். இவர் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்தவர். 1945 ஜூலை 14ஆம் தேதி பிறந்தவர். இவரது பெற்றோர் பெயர் சிவசுப்பிரமணிய நாடார், வாமசுந்தரி தேவி. மதுரை பள்ளி, கல்லூரி படிப்பை முடித்தார். பின்னர் கோவை பி.எஸ்.ஜி கல்லூரியில் எலக்ட்ரிகல் அண்ட் எலக்ட்ரானிக்ஸ் எஞ்சினியரிங் படித்தார்.
இந்நிலையில் சொந்தமாக தொழில் தொடங்க வேண்டிய ஆர்வம் ஏற்பட்டது. இதையடுத்து 1976ஆம் ஆண்டு டெல்லியில் இந்துஸ்தான் கம்ப்யூட்டர்ஸ் லிமிடெட் (HCL) என்ற நிறுவனத்தை ஷிவ் நாடார் தொடங்கினார். இவருடன் 7 பேர் ஒன்று சேர்ந்து ஹெச்.சி.எல் நிறுவனத்தை தொடங்கியிருந்தனர். ரூ.1,87,000 முதலீட்டில் கேரேஜில் நண்பர்களுடன் இணைந்து நாடார் நிறுவனத்தைத் தொடங்கினார்.
முதலில் ஹார்ட்வேர் நிறுவனமான தனது பயணத்தை தொடங்கியது. மைக்ரோ பிராசசர், கால்குலேட்டர் உள்ளிட்டவற்றை தயாரித்தனர். அதன்பிறகு கணினி தயாரிக்கும் பணியிலும் ஈடுபட்டது. இந்த சூழலில் மென்பொருள் வளர்ச்சி சர்வதேச அளவில் மிகப்பெரிய சந்தையாக உருவெடுக்க ஆரம்பித்தது. இதை சரியாக புரிந்து கொண்ட ஷிவ் நாடார், ஹெச்.சி.எல் நிறுவனத்தை சாப்ட்வேர் துறைக்கு மாற்றினார்.
சாப்ட்வேர் இல்லாமல் எந்த ஒரு டிஜிட்டல் கருவிகளும் இயங்காது என்ற நிலை காணப்படுகிறது. இதற்கான சந்தை என்பது மிகப்பெரியது. எனவே இந்தியா மட்டுமின்றி பல்வேறு நாடுகளில் கிளைகளை திறக்க ஹெச்.சி.எல் நிறுவனம் முடிவு செய்தது. தற்போது 50க்கும் மேற்பட்ட நாடுகளில் கால் தடம் பதித்து ஒரு லட்சத்திற்கும் மேற்பட்ட ஊழியர்களை கொண்டு இயங்கி வருகிறது. வெறுமனே தொழில் சார்ந்த சிந்தனை மட்டுமின்றி, சமூக சேவையிலும் ஷிவ் நாடாருக்கு ஆர்வம் ஏற்பட்டது.
இதன் காரணமாக 1994ல் ஹெச்.சி.எல் பவுண்டேஷனை தொடங்கினார். தமிழ்நாடு மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களிலும் கிளைகள் திறக்கப்பட்டன. குறிப்பாக கல்விக்காக ஏராளமாக வாரி இறைத்தார். கல்வி நிறுவனங்களை திறந்து வைத்தார். மேலும் பல்வேறு சமூக நலத்திட்டங்களுக்காக நன்கொடை வழங்கும் பழக்கத்தையும் ஏற்படுத்தி கொண்டார். தனது வருமானத்தில் 10 சதவீதத்தை நன்கொடையாக வழங்க வேண்டும் என்பது தான் ஷிவ் நாடாரின் எண்ணம். இதை தன் குடும்பம் கஷ்டப்படும் நிலையில் இருந்த போது, தன்னுடைய அம்மாவிடம் இருந்து கற்றுக் கொண்டதாக ஒருமுறை ஷிவ் நாடார் கூறியிருக்கிறார்.
40 வருடங்கள் இந்த நிறுவனத்தை முன்னின்று வழிநடத்திய ஷிவ் நாடார் தனது மகள் ரோஷ்னி நாடாரிடம் பொறுப்புகளை ஒப்படைத்தார். இந்தியாவின் மிகப் பெரிய பணக்காரர்களில் ஒருவராக இருப்பதைத் தவிர, தனது தொண்டு பணிகள் காரணமாக தனித்துவமாக திகழ்கிறார்.
EdelGive Hurun என்ற தொண்டு நிறுவனத்தின் 2023 அறிக்கையின்படி, இந்திய அளவில் அதிக நன்கொடை வழங்கும் பணக்காரர்கள் பட்டியலில் 2022-23ஆம் நிதியாண்டில் நம்பர் ஒன் இடத்தை பிடித்திருப்பவர் ஷிவ் நாடார். இவர் அளித்துள்ள நன்கொடை 2,042 கோடி ரூபாய். இதை நாள் ஒன்றுக்கு எவ்வளவு எனக் கணக்கிட்டால் 5.6 கோடி ரூபாய் ஆகும்.
“இந்தியாவின் மிகவும் தாராளமான மனிதர்” என்ற பட்டத்தை தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக தக்க வைத்திருக்கும் ஷிவ் நாடார், எவ்வளவு பெரிய உயரத்திற்கு சென்றாலும் மற்றவர்களுக்கு தன்னால் இயன்ற உதவிகளை செய்ய வேண்டும் என்பதற்கு மிகச்சிறந்த உதாரணம்.
Discover the inspiring journey of Shiv Nadar, Delhi’s richest man, with a net worth of Rs 2.79 lakh crore. Learn about his extensive philanthropic efforts, including daily donations of Rs 5.6 crore in 2022-2023, and his impact on the global IT industry through HCL Technologies.