கேரளாவில் இருந்து தென்மாவட்டங்களில் சட்டவிரோதமாக கழிவுகள் கொட்டப்படுவதை தடுக்க திமுக தலைமையிலான தமிழ்நாடு அரசு தவறிவிட்டதாக பாஜக கட்சியின் மாநிலத் தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார். இந்தப் பிரச்னைக்குத் தீர்வு காணாவிட்டால், ஜனவரி மாதம் கேரளாவுக்குப் பேரணி நடத்தப் போவதாக அறிவித்துள்ளார்.
கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி உள்ளிட்ட தமிழ்நாட்டின் தென்மாவட்டங்கள், கேரளாவில் இருந்து உயிரி மருத்துவம், பிளாஸ்டிக், கோழிக்கழிவுகள் கொட்டும் இடமாக மாறியுள்ளன என்று அண்ணாமலை குற்றம்சாட்டியிருக்கிறார். இப்பிரச்னைக்கு தீர்வு காண போதிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றும், சட்ட விரோத செயல்கள் தடையின்றி தொடர தமிழ்நாடு அரசு அனுமதிப்பதாகவும் விமர்சித்துள்ளார்.
தமிழக எல்லையோர சோதனைச் சாவடிகள், கேரளாவில் இருந்து வரும் கழிவுகளை ஏற்றிச் செல்லும் வாகனங்களின் சேகரிப்பு மையங்களாக மாறிவிட்டதாகவும் கூறியுள்ளார். அதிகாரிகளிடமும், முதலமைச்சரின் மக்கள் குறை தீர்க்கும் பிரிவிலும் பலமுறை புகார் அளித்தும், இது சம்பந்தமாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.
குப்பை கொட்டுவதைத் தாண்டி, தமிழ்நாட்டில் இருந்து கேரளாவுக்கு சட்டவிரோதமாக கனிமங்கள் கடத்தப்படுவது போன்ற மற்ற எல்லைப் பிரச்னைகளை அரசு அலட்சியப்படுத்துவதாகவும் அண்ணாமலை கூறியுள்ளார். மேலும், மாநில நலன்களை காக்க திமுக அரசு தவறியதை இந்த செயல் எடுத்துக்காட்டுவதகாவும் குற்றம்சாட்டியுள்ளார்.
இதனை கண்டித்து, ஜனவரி முதல் வாரத்தில் கேரளாவுக்கு கண்டன பேரணி நடத்தப்போவதாக அறிவித்துள்ளார் அண்ணாமலை. தமிழ்நாடு அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்காவிட்டால், சட்டவிரோதமாக கொட்டப்படும் குப்பைகளை மீண்டும் கொண்டு வந்து போராட்டம் நடத்தப்படும் என எச்சரித்துள்ளார்.
தமிழகத்தின் உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்றும், குப்பை கொட்டும் இடமாக தமிழ்நாட்டை மாற்றக்கூடாது என்றும் வலியுறுத்தியுள்ளார்.
BJP leader K. Annamalai accuses the DMK-led Tamil Nadu government of neglecting illegal waste dumping from Kerala. He plans a protest march to Kerala in January, demanding accountability and action.