இந்திய சினிமா சமீப வருடங்களாக பல வியத்தகு மாற்றங்களை கண்டுள்ளது. ஹிந்தி படங்கள் திரையுலகை ஆதிக்கம் செலுத்தி வந்த நிலையில் தென்னிந்திய சினிமா, குறிப்பாக தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாள மொழி படங்கள், நாடு முழுவதும் பரவலான பிரபலத்தைப் பெற்றுள்ளன. கேஜிஎஃப், பாகுபலி மற்றும் ஆர்ஆர்ஆர் போன்ற படங்கள் இதற்கு ஒரு சான்று. பல பாக்ஸ் ஆபிஸ் சாதனைகளை முறியடித்து, உலகளவில் தென்னிந்திய படங்கள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன.
மரைக்காயர்: அரபிக்கடலின் சிங்கம்
மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் மரைக்காயர்: அரபிக்கடலின் சிங்கம் கடந்த 2021 இல் வெளியானது. திரையரங்குகளில் ரிலீஸ் ஆவதற்கு முன்பே திரையுலகினர் மத்தியில் கவனம் ஈர்த்த இப்படம் அட்வான்ஸ் புக்கிங் மூலம் மட்டுமே ரூ. 100 கோடி வசூல் செய்தது. இந்த மைல்கல்லை எட்டிய முதல் இந்திய படம் என்ற பெருமையையும் பெற்றது. இப்படம் 4,100 திரையரங்குகளில் வெளியிடப்பட்டது. இது தென்னிந்திய சினிமாவின் வரலாற்றில் ஒரு குறிப்பிடத்தக்க மைல்கல்லாகும்.
சவால்கள் மற்றும் வெளியீட்டில் தாமதம்
மரைக்காயர் ரிலீஸ் ஆவதற்கு பல தடைகளை எதிர்கொண்டது. முதலில் மார்ச் 2020 இல் வெளியிட திட்டமிடப்பட்டது. கோவிட்-19 தொற்றுநோய் காரணமாக படம் தாமதமானது. இதனையடுத்து OTT தளத்தில் வெளியிட தயாரிப்பாளர் திட்டமிட்டார். அந்த சமயத்தில் திரைப்பட வளர்ச்சிக் கழகம் மற்றும் சலசித்ரா அகாடமி அமைச்சர் சாஜி செரியன், படத்தை தியேட்டரில் வெளியிட அறிவுறுத்தினார். இறுதியாக வெற்றிகரமாக தியேட்டரில் வெளியிடப்பட்டு அமோக வரவேற்பினை பெற்றது. அந்த ஆண்டின் மிகவும் வெற்றிகரமான வெளியீடுகளில் ஒன்றாகவும் மரைகாயர் மாறியது.
நடிகர்கள் மற்றும் படக்குழுவினர்
பிரியதர்ஷன் இயக்கிய இப்படத்தில் மோகன்லால் குஞ்சாலி மரைக்காயர் என்ற வரலாற்று நபரின் முக்கிய பாத்திரத்தில் நடித்தார். மேலும் அர்ஜுன் சர்ஜா, சுனில் ஷெட்டி, மஞ்சு வாரியர், பிரணவ் மோகன்லால் உள்ளிட்ட பலர் நடித்தனர். ராகுல் ராஜ் மற்றும் அங்கித் சூரி இருவரும் இணைந்து இசையமைத்தனர். பிரம்மாண்ட காட்சிகளை எஸ் திருநாவுக்கரசு ஒளிப்பதிவு செய்தார்.
பாக்ஸ் ஆபிஸ் வெற்றி
மரைக்காயர் இறுதியாக டிசம்பர் 2021 இல் வெளியாகி, பாக்ஸ் ஆபிஸின் பழைய சாதனைகளை உடைத்தது. ரிலீசுக்கு முன்பாக ரூ. 100 கோடிக்கு டிக்கெட் முன்பதிவை நிகழ்த்தி சாதனை படைத்தது. மரைக்காயர் படத்தின் வெற்றி, பாலிவுட் படங்களுக்கு இணையாக தென்னிந்திய படைப்புகள் போட்டியிடும் என்பதற்கு சான்றாக அமைந்தது. படத்தின் பாக்ஸ் ஆபிஸ் வெற்றியானது இந்தியத் திரைப்படத் துறையில் ஒரு திருப்புமுனையைக் குறித்தது.
மரைக்காயர்: அரபிக்கடல் சிங்கத்தின் வெற்றி, இந்தியத் திரையுலகில் தென்னிந்திய சினிமாவின் ஆதிக்கம் அதிகரித்து வருவதை உலகிற்கு பறைசாட்டியது. படத்தின் முன்பதிவுகள், சாதனை படைத்த வெளியீடு மற்றும் பாக்ஸ் ஆபிஸ் வசூலில் ஏற்பட்ட தாக்கம் திரைப்படத்துறையை தென்னிந்திய சினிமா பக்கம் திருப்பியது. கேஜிஎஃப், பாகுபலி மற்றும் ஆர்ஆர்ஆர் போன்ற பல பிராந்தியத் படங்கள் தொடர்ந்து ரசிகர்களை கவர்ந்து வருவது, இந்திய சினிமா ரசிகர்களின் ரசனை ,மாறி வருவதை குறிக்கிறது என்பது மறுக்க இயலாத உண்மை.
South Indian cinema is redefining the Indian film industry. With movies like Marakkar, KGF, and RRR breaking records, regional films are captivating pan-India and global audiences.