தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினின் மருமகன் சபரீசன் வேதமூர்த்தி, இந்தியாவின் முதல் தனியார் விண்வெளி தொழில்நுட்பத்தில் களமிறங்கியுள்ளார். அதாவது, விண்வெளி ஆர்வலரான சபரீசன், இந்தியாவின் முதல் தனியார் விண்வெளி தொழில்நுட்ப நிறுவனமான ‘வானம்’ மூலம் தனது கனவை நனவாக்கியுள்ளார்.
சபரீசனின் சகோதரர், ஹரிஹரன் வேதமூர்த்தி மற்றும் சமீர் பாரத் ராம் ஆகியோருடன் இந்த முயற்சி தொழில்நுட்ப ரீதியாக தொடங்கப்பட்டாலும் இந்த நிறுவனம் சபரீசனை சார்ந்திருக்கும் என தெரிகிறது. சபரீசன், தனது அரசியல் குடும்பத் தொடர்புகளில் இருந்து விலகி, விண்வெளித் துறையில் நுழைந்துள்ளார்.
முன்னாள் இஸ்ரோ விஞ்ஞானி பத்ம பூஷன் நம்பி நாராயணனின் ஆதரவுடன், அவரது வழிகாட்டுதலில் வானம் உறுதியான அடித்தளத்தைக் கொண்டுள்ளது. இருப்பினும், இந்த புதிய முயற்சி விரைவில் SpaceX போன்றவற்றுக்கு போட்டியாகி, உலகளாவிய விண்வெளிப் பந்தயத்தில் தனக்கென தனி முத்திரையைப் பதிக்குமா அல்லது ‘புதுமையான’ பட்டியலில் மற்றொரு மைல் கல்லை தொடுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
சென்னையில் நடைபெற்ற வானம் நிறுவனத்தின் தொடக்க விழாவில், தொழிலதிபர் ரவி மரிவாலா மற்றும் நடிகர்-இயக்குனர் ஆர். மாதவன் ஆகியோரும் பங்கேற்றனர். இந்நிகழ்ச்சியை தமிழக தொழில்துறை அமைச்சர் டிஆர்பி ராஜா துவக்கி வைத்தார், நம்பி நாராயணன் கலந்து கொண்டு விழாவை சிறப்பித்தார்.
வானம் நிறுவனம் இந்திய விண்வெளி தொடக்க நிலப்பரப்பை மாற்றும் புதிய முயற்சிகளுக்கு வணிக நிபுணத்துவம் மற்றும் சிறப்பு கருவிகளை வழங்கும் வகையில் துவங்கப்பட்டுள்ளது. ஆரம்ப-நிலை விண்வெளி ஸ்டார்ட்அப்கள் தயாரிப்பு-சந்தை பொருத்தம் மற்றும் அளவை அடைய உதவுவதே வானம் நிறுவனத்தின் குறிக்கோள் என கூறப்படுகிறது.
வானம் விண்வெளி தொழில்நுட்ப நிறுவனம் ஸ்டார்ட்அப்களைப் பற்றியது மட்டுமின்றி தூத்துக்குடியில் அமைக்கப்பட உள்ள உந்துசக்தி மையம் உட்பட தமிழகத்தின் பரந்த விண்வெளி உத்தியில் முக்கிய பங்கு வகிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இந்தியாவின் இரண்டாவது ராக்கெட் ஏவுதளத்திற்கான 950 கோடி ரூபாய் முதலீட்டின் ஒரு பகுதியான இந்த திட்டம் , இந்தியாவின் வளர்ந்து வரும் விண்வெளி தொழில்நுட்ப மையமாக தமிழ்நாட்டை நிலைநிறுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Sabareesan Vedamurthy, son-in-law of Tamil Nadu CM MK Stalin, launches Vaanam, India’s first private space-tech accelerator. Backed by ISRO’s Nambi Narayanan, Vaanam aims to revolutionize space technology and position Tamil Nadu as a hub for innovation.