தமிழ்நாட்டில் டாடா மோட்டார்ஸ் தனது புதிய ஆலையை தொடங்கியுள்ளது. டாடா வாகனங்கள் மட்டுமின்றி அடுத்த தலைமுறை ஜாகுவார் லேண்ட் ரோவர் கார்களும் இந்த ஆலையில் தயாரிக்கப்படும். இந்த கார்கள் மற்ற நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த ஆலையின் தொடக்க விழாவில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், டாடா சன்ஸ் மற்றும் டாடா மோட்டார்ஸ் நிறுவன தலைவர் என்.சந்திரசேகரன் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கலந்து கொண்டனர். இந்த ஆலை ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள பணப்பாக்கத்தில் அமைந்துள்ளது. இந்த ஆலை மூலமாக சுமார் 5,000 பேருக்கு வேலை வாய்ப்புகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆலை திறப்பு விழாவில் டாடா மோட்டார்ஸ் நிறுவன தலைவர் என்.சந்திரசேகரன் பேசும் போது, ஆலையில் தயாரிக்கப்படும் கார்கள், இந்திய சந்தைக்கு மட்டுமின்றி, வெளிநாட்டு சந்தைகளையும் கருத்தில் கொண்டு வடிவமைக்கப்படும். இந்த ஆலை சொகுசு மற்றும் மின்சார வாகனங்களையும் உற்பத்தி செய்யும்.
டாடா சன்ஸ் மற்றும் டாடா மோட்டார்ஸ் தலைவர் மேலும் கூறுகையில், சுமார் 5,000 நேரடி மற்றும் மறைமுக வேலை வாய்ப்புகள் இந்த ஆலை மூலமாக உருவாக்கப்படும். பல டாடா குழும நிறுவனங்கள் வெற்றிகரமாக இயங்கி வரும் பகுதி தமிழ்நாடு. ‘ஆட்டோமொபைல் தொழிலுக்கு தேவையான அனைத்து வசதிகளும் இம்மாநிலத்தில் உள்ளன. திறமையான பணியாளர்கள் கிடைப்பதை உறுதிசெய்கிறது’ என தெரிவித்துள்ளார்.
பெண்களுக்கு இயன்ற அளவு வேலை வாய்ப்புகளை வழங்குவதை இந்த ஆலை நோக்கமாகக் கொண்டுள்ளது. ஜேஎல்ஆர் கார்கள் இந்தியாவில் தயாரிக்கப்படும் என டாடா மோட்டார்ஸ் சமீபத்தில் அறிவித்தது. இங்கிலாந்துக்கு வெளியே JLR கார்கள் தயாரிக்கப்படுவது இதுவே முதல் முறை.
டாடா மோட்டார்ஸ் தனது புதிய ஆலையில் சுமார் ₹9,000 கோடி முதலீடு செய்யவுள்ளது. இந்த ஆலை ஆண்டுக்கு 2,50,000 வாகனங்களை உற்பத்தி செய்யும் திறன் கொண்டதாக இருக்கும். உற்பத்தி பல கட்டங்களில் மேற்கொள்ளப்படும். இன்னும் 5 முதல் 7 ஆண்டுகளுக்குள் இந்த உற்பத்தி நிலையை எட்டுவது என்று நம்பிக்கையுடன் இருப்பதாக டாடா மோட்டார்ஸ் தலைவர் என்.சந்திரசேகரன் தெரிவித்தார்.
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசும் போது, தமிழ்நாட்டில் உற்பத்தியில் டாடா குழுமம் எப்போதும் பங்களிக்கிறது. தமிழ்நாட்டுடனான அவர்களின் நீண்டகால உறவு குறிப்பிடத்தக்கது. ராணிப்பேட்டையில் டாடா குழுமம் புதிய ஆலையை நிறுவுவதை நாங்கள் வரவேற்கிறோம். அதற்கான முழு ஆதரவையும் தமிழ்நாடு அரசு வழங்கும். இவ்வாறு தெரிவித்துள்ளார்.
Tata Motors has launched a state-of-the-art manufacturing plant in Tamil Nadu, focusing on luxury and electric vehicles, including the next generation of Jaguar Land Rover cars. With an investment of ₹9,000 crore, the plant is expected to create 5,000 jobs and boost India’s global automotive industry presence.