கேரளாவின் கரிம்பலா பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த கோபிகா கோவிந்த், மாநிலத்தின் முதல் பழங்குடி விமானப் பணிப்பெண்ணாக வரலாறு படைத்துள்ளார். அலக்கோடு அருகே உள்ள கவுங்குடியின் எஸ்டி காலனியில் வளர்ந்த அவரது குழந்தைப் பருவம் பொருளாதாரப் போராட்டங்களை எதிர்க்கொண்டது. அவரது பெற்றோர், பி. கோவிந்தன் மற்றும் வி.ஜி., தினசரி கூலித் தொழிலாளர்கள். மற்றும் இவரது குடும்பம் தொடர்ச்சியான நிதி நெருக்கடிகளை எதிர்கொண்டது.

இந்த சவால்கள் இருந்தபோதிலும், கோபிகா சிறு வயதிலிருந்தே ஒரு விமானப் பணிப்பெண்ணாக வேண்டும் என்ற கனவோடு இயங்கி வந்தார். பொருளாதாரம் குறைவாக இருந்தாலும், ஆரம்பத்தில் வேதியியலில் பி.எஸ்சி. படித்தார். அந்த சமயத்தில் படிப்பில் மிகவும் கவனம் செலுத்தினார்.
தொடர் முயற்சி
முதுகலைப் பட்டப்படிப்பு முடித்து ஒரு வருடம் ஆன நிலையில், செய்தித்தாளில் வெளியான விமானப் பணிப்பெண்களின் புகைப்படம் கோபிகாவின் குழந்தைப் பருவ ஆசையை மீண்டும் தூண்டியது. இதன் மூலம் உந்துதல் பெற்ற அவர், வயநாட்டின் கல்பெட்டாவில் உள்ள டிரீம் ஸ்கை ஏவியேஷன் பயிற்சி அகாடமியில் ஒரு வருட விமானப் பயிற்சி டிப்ளமோ படிப்பில் சேர்ந்தார். இதற்கு அரசாங்க சார்பில் இருந்தும் ஆதரவு கிடைத்தது.
படிப்பை முடிப்பதற்கு முன்பே, அவர் வேலைகளுக்காக விண்ணப்பிக்கத் துவங்கினார். அவரது முதல் நேர்காணல் தேர்வு தோல்வியில் முடிந்தாலும், தனது உறுதிப்பாட்டில் வலுவாகவே இருந்தார். இரண்டாவது முயற்சியில், அவர் வெற்றி பெற்று தனது பயிற்சியைத் தொடங்கினார்.
முதல் பயணம்
மூன்று மாத தொழில்முறை பயிற்சிக்குப் பிறகு, கோபிகா இறுதியாக ஒரு கேபின் குழு உறுப்பினராக பறந்தார் – அவரது முதல் விமானம் கண்ணூரிலிருந்து வளைகுடா நாட்டிற்கு சென்றது. இது ஒரு தனிப்பட்ட சாதனை மட்டுமல்ல, பழங்குடி மற்றும் பிற்படுத்தப்பட்ட சமூகங்களைச் சேர்ந்த பல இளம் பெண்கள் பெருமை மற்றும் உத்வேகம் பெற்ற தருணமாகும்.
கனவு காண்பவர்களுக்கு அறிவுரை
மனோரமா ஆன்லைன் செய்தி நிறுவனத்திடம் பேசிய கோபிகா, ஆர்வமுள்ள பெண்களுக்கான தனது ஆலோசனையைப் பகிர்ந்து கொண்டார்:
“உங்களுக்கு ஒரு கனவு இருந்தால், அதை அச்சமின்றித் தொடருங்கள். நம்பிக்கை அவசியம். உங்கள் இலக்குகளைப் பற்றி பேசாதீர்கள் – உங்களுடைய வெற்றி உங்கள் முயற்சிகளைப் பற்றிப் பேசட்டும்.”
பலருக்கும் முன்மாதிரி
கோபிகா கோவிந்தின் கதை, உறுதிப்பாடு, வாய்ப்பு மற்றும் தன்னம்பிக்கை எதையும் அடைய முடியும் என்பதற்கு ஒரு சக்திவாய்ந்த உதாரணமாக ஆகியுள்ளது. வெற்றிக்காக பாடுபடும் விளிம்புநிலை சமூகங்களைச் சேர்ந்த தனிநபர்களுக்கு உத்வேகத்தையும் மற்றும் தன்னம்பிக்கையின் முக்கியத்துவத்தையும் அவரது பயணம் எடுத்துக்காட்டுகிறது.