2025 ஆம் ஆண்டுக்கான ஃபோர்ப்ஸ் பில்லியனர் பட்டியலில் இந்தியாவின் பணக்காரப் பெண்மணியாக ஓபி ஜிண்டால் குழுமத்தின் தலைவரான சாவித்ரி ஜிண்டால் இடம்பிடித்துள்ளார். $35.5 பில்லியன் நிகர மதிப்புடன், முகேஷ் அம்பானி மற்றும் கெளதம் அதானிக்கு அடுத்தபடியாக இந்தியாவின் மூன்றாவது பணக்காரர் என்ற சாதனையை படைத்துள்ளார். தனது வணிக சாம்ராஜ்யத்திற்கு அப்பால், முக்கிய அரசியல் பிரமுகராகவும், ஹரியானாவில் எம்.எல்.ஏ.வாகவும் பணியாற்றுகிறார்.

பாரம்பரியத்தை தொடரும் ஜிண்டால்
ஒரு வணிகக் குடும்பத்தில் பிறந்த சாவித்ரி ஜிண்டால், 2005 ஆம் ஆண்டு தனது கணவர் ஓம் பிரகாஷ் ஜிண்டால் துயர மரணத்திற்குப் பிறகு ஓபி ஜிண்டால் குழுமத்தை வழி நடத்த துவங்கினார். சவால்கள் இருந்தபோதிலும், எஃகு, மின்சாரம், சிமென்ட் மற்றும் உள்கட்டமைப்பு ஆகியவற்றில் செயல்படும் நிறுவனத்தை வெற்றிகரமாக விரிவுபடுத்தினார். அவரது தலைமையின் கீழ், குழுமம் தொடர்ந்து செழித்து வளர்ந்து வருகிறது. இந்தியாவின் மிகவும் சக்திவாய்ந்த தொழில்துறை நிறுவனங்களில் ஒன்றாக தன்னுடைய நிலையைத் தக்க வைத்துக் கொண்டுள்ளது ஓபி ஜிண்டால்.
குடும்பம் மற்றும் தொழில்துறை வளர்ச்சி
ஓம் பிரகாஷ் ஜிண்டால் மறைவுக்குப் பிறகு, அவரின் நான்கு மகன்களிடையே அவருடைய தொழில் பிரிக்கப்பட்டது. ஒவ்வொருவரும் வெவ்வேறு துறைகளை மேற்பார்வையிட்டனர்:
சஜ்ஜன் ஜிண்டால் JSW ஸ்டீல், JSW சிமென்ட் மற்றும் JSW பெயிண்ட்ஸ் நிறுவனங்களுக்கு தலைமை தாங்குகிறார். 2023 ஆம் ஆண்டில், அவர் JSW இன்ஃப்ராஸ்ட்ரக்சரை பொதுவில் எடுத்துக்கொண்டு, MG மோட்டார் இந்தியாவில் பங்குகளை வாங்குவதன் மூலமாக மின்சார வாகனங்களாக விரிவுபடுத்தினார்.
நவீன் ஜிண்டால் குழுமத்தின் மற்றொரு முக்கிய பிரிவான ஜிண்டால் ஸ்டீல் & பவரை நடத்துகிறார்.
ஓம் பிரகாஷ் வணிகம் பிரிக்கப்பட்ட போதும், சாவித்ரி ஜிண்டால் குடும்பத்தின் வணிக சாம்ராஜ்யத்திற்கு வழிகாட்டும் சக்தியாக இருந்து, அதன் நிலையான வளர்ச்சியையும் நிலைத்தன்மையையும் உறுதி செய்கிறார்.
இந்தியாவின் பணக்கார பெண்
சாவித்ரி ஜிண்டால் இந்தியாவின் பணக்காரப் பெண்ணாக உயர்ந்தது, பெருநிறுவன உலகில் பெண்களின் வளர்ந்து வரும் பங்கை உலகிற்கே பறைசாற்றுகிறது. அவர் வணிகத் தலைமையையும், அரசியலையும் ஒரு சேர வழிநடத்தி வருகிறார். இதன் மூலமாக இரு துறைகளிலும் ஒரு வலிமையான நபராக தன்னை நிரூபிக்கிறார்.
அவரது வெற்றிக் கதை சாதிக்க துடிக்கப்பவர்களுக்கு உத்வேகம் அளிக்கக்கூடியதாகவும், பொது வாழ்வில் தாக்கத்தையும் ஏற்படுத்துகிறது. அதே வேளையில் இந்தியாவின் மிக முக்கியமான வணிகக் குழுக்களில் ஒன்றை பெண் ஒருவர் வழிநடத்தும் திறனையும் காட்டுகிறது.