பிரபல கர்நாடக இசைப் பாடகர் சிவஸ்ரீ ஸ்கந்தபிரசாத், கர்நாடக பாஜக எம்பி தேஜஸ்வி சூர்யாவை கடந்த மார்ச் 6, 2025 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இந்த நிகழ்வில் நெருங்கிய குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, பிரதாப் சிம்ஹா மற்றும் அமித் மாளவியா உள்ளிட்ட பாஜக பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

திருமணத்திற்குப் பிறகு, சமூக ஊடகங்களில் அதிகம் தேடப்பட்ட ஒருவராக ஆகிவிட்டார் சிவஸ்ரீ ஸ்கந்தபிரசாத். இவரது திருமண புகைப்படங்கள் சோஷியல் மீடியாவில் தீயாய் பரவின.
யாரிந்த சிவஸ்ரீ ஸ்கந்தபிரசாத்?
சென்னையைச் சேர்ந்த சிவஸ்ரீ ஸ்கந்தபிரசாத் கலைத்துறையை சார்ந்தவர். கர்நாடக இசை, பரதநாட்டியம் மற்றும் காட்சி கலைகளில் செய்த பங்களிப்புகளுக்காக பரவலாக அறியப்படுகிறார். இவர் மிருதங்க வித்வான் சீர்காழி ஸ்ரீ ஜே ஸ்கந்தபிரசாத்தின் மகள். இவரது குடும்பத்தினர் புகழ்பெற்ற இசைக்கலைஞர்கள் மற்றும் நடனக் கலைஞர்களைக் பூர்வீகமாக கொண்டவர்கள். அவரது தந்தைவழி தாத்தா, மறைந்த கலைமாமணி சீர்காழி ஆர். ஜெயராமன், ஒரு புகழ்பெற்ற இசைக்கலைஞர். அவரது பாட்டி, சாந்தி ஜெயராமன், பரதநாட்டிய நிகழ்ச்சிகளுக்கு நன்கு அறியப்பட்ட குரல் கலைஞராக இருந்தார்.
சமூக ஊடகங்களில், குறிப்பாக எக்ஸ் தளத்தில், சிவஸ்ரீ தன்னை ஒரு “பாரதிய, இசைக்கலைஞர், நடனக் கலைஞர்” என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், பாரம்பரிய இந்திய கலை வடிவங்களை மீட்டெடுப்பதில் கவனம் செலுத்தும் ஒரு முயற்சியான ஆஹுதி தளத்தின் நிறுவனர் ஆவார்.
கல்வி மற்றும் பயிற்சி
சிவஸ்ரீ தஞ்சாவூரில் உள்ள சாஸ்த்ரா பல்கலைக்கழகத்தில் பயோ-இன்ஜினியரிங் பிரிவில் பி.டெக் பட்டமும், சென்னை பல்கலைக்கழகத்தில் பரதநாட்டியத்தில் எம்.ஏ பட்டமும் பெற்றுள்ளார்.
குரு ஸ்ரீ ஏ.எஸ். முரளியிடம் கர்நாடக இசையில் பயிற்சி பெற்ற இவர், பல மதிப்புமிக்க விருதுகளை வென்றுள்ளார்.
பாரத கலா சூடாமணி
யுவ சம்மன் விருது
பஜனா பூஷண் உள்ளிட்ட விருதுகளை பெற்றுள்ளார்.
சிவஸ்ரீயின் பரதநாட்டிய பயணம் அவரது 3 வயதில் கலைமாமணி ஸ்ரீமதி கிருஷ்ணகுமாரி நரேந்திரன் மற்றும் ஆச்சார்யா சூடாமணி குரு ஸ்ரீமதி ரோஜா கண்ணன் ஆகியோரின் கீழ் தொடங்கியது. மேலும், அவர் ஏராளமான தனி நடன நிகழ்ச்சிகளையும் நிகழ்த்தியுள்ளார்.
குறிப்பிடத்தக்க சாதனைகள்
கர்நாடக இசை மற்றும் பரதநாட்டியத்தில் சிறந்து விளங்குவதோடு மட்டுமல்லாமல், பின்னணிப் பாடலிலும் சிவஸ்ரீ முத்திரை பதித்துள்ளார். ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்த பொன்னியின் செல்வன் 1 இல் ஒரு பாடல் பாடியுள்ளார்.
இந்திய பாரம்பரிய இசை மற்றும் நடன துறையில் தனது வளமான கலை மரபு மற்றும் பல்வேறு சாதனைகளுடன், சிவஸ்ரீ ஸ்கந்தபிரசாத், ஒரு முக்கிய நபராகத் தொடர்ந்து திகழ்கிறார். இந்நிலையில் தேஜஸ்வி சூர்யாவுடனான அவரது திருமணம் பரவலான கவனத்தை ஈர்த்துள்ளது.
Renowned Carnatic singer Sivasri Skandaprasad married BJP MP Tejasvi Surya in an intimate ceremony. Learn more about her artistic journey, achievements, and family background.