இந்திய சினிமாவில் சிறந்த நட்சத்திர நடிகர் மற்றும் நடன கலைஞர் பிரிவில் தெலுங்கு நடிகர் சிரஞ்சீவிக்கு கின்னஸ் உலக சாதனை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
1978ஆம் ஆண்டு செப்டம்பர் 22ல் வெளியான ‘பிராணம் கரீது’ படத்தின் மூலம் தெலுங்கு சினிமாவில் அறிமுகமானவர் சிரஞ்சீவி. இவர் கருப்பு வெள்ளை படக் காலத்தில் தொடங்கி இன்றளவும் கதாநாயகனாக நடித்து வருகிறார். இப்போது ‘விஸ்வம்பரா’ என்ற தலைப்பில் தனது 156வது படத்தில் நடித்து வருகிறார். இப்படம் அடுத்தாண்டு ஜனவரி 10ஆம் தேதி வெளியாகவுள்ளது.
இந்த நிலையில் தெலுங்கு சினிமாவில் சிரஞ்சீவி அறிமுகமான அதே தேதியில் அவருக்கு கின்னஸ் விருது வழங்கப்பட்டுள்ளது. ஹைதராபாத்தில் கடந்த 22 ஆம் தேதி நடந்த கின்னஸ் உலக சாதனை விருது நிகழ்ச்சியில், 45 வருடங்களுக்கு மேலாக திரையுலகில் பயணித்து 156 படங்களில் நடித்து 537 பாடல்களுக்கு 24 ஆயிரம் வித்தியாசமான நடன அசைவுகளை ஆடியிருப்பதாக அவரை கெளரவித்து இந்த கின்னஸ் விருது வழங்கப்பட்டுள்ளது. இந்த விருதினை பாலிவுட் நடிகர் அமீர் கான் கொடுக்க சிரஞ்சீவி பெற்றுக் கொண்டார்.
தெலுங்கு திரையுலகின் ‘மெகா ஸ்டார்’ என அழைக்கப்படும் சிரஞ்சீவி, கடந்த 45 ஆண்டுகளில், 156 படங்களில் நடித்துள்ளார். அதில் 547 பாடல்களில் அவர் 24,000-க்கும் மேற்பட்ட நடன அசைவுகளை நிகழ்த்தியுள்ளார். பாப், ஜாஸ், ஹிப்ஹாப் என மேற்கத்திய நடனங்களையும், இந்திய கிளாஸிக் நடன அசைவுகளையும் தனது படங்களில் வெளிப்படுத்தி சிறந்த நடன கலைஞராக திகழ்ந்துள்ளார்.
இந்நிலையில் கின்னஸ் விருது வழங்கப்பட்டது குறித்து நெகிழ்ச்சியுடன் பேசிய நடிகர் சிரஞ்சீவி, ‘இந்த தருணம் என் வாழ்நாளில் மறக்க முடியாதது. கின்னஸ் உலக சாதனையில் இடம்பெறுவேன் என்று நான் ஒருபோதும் நினைத்துப் பார்க்கவில்லை. ஆனால், என் நடனத்துக்காக கவுரவிக்கப்படுவது ஆச்சரியமாக உணர்கிறேன். நடனம் என்பது என் திரையுலக வாழ்க்கையில் ஓர் அங்கமாக மாறிவிட்டது. மகிழ்ச்சியாக உணர்கிறேன்’ எனத் தெரிவித்துள்ளார்.
Megastar Chiranjeevi sets a Guinness World Record for being the most prolific film star in Indian cinema. With a career spanning 45 years, he is celebrated for his 24,000 dance moves in 156 films.