தமிழ்நாட்டில் அதிக அளவில் தொழில் நிறுவனங்கள் முதலீடு செய்யும் வகையிலும், அதிக எண்ணிக்கையிலான வேலைவாய்ப்புகளை இளைஞர்களுக்கு உருவாக்கவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமெரிக்க நாட்டிற்கு அரசு முறைப்பயணம் மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் தமிழ்நாட்டில் ரூ. 2,000 கோடியில் வளர்ச்சி, உலகளாவிய உதவி மையம் மற்றும் உற்பத்தி மையம் அமைக்க அமெரிக்காவின் ‘ட்ரில்லியன்ட்’ நிறுவனத்துடன் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தம் ஆகியுள்ளது.
இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், அதிக அளவில் தமிழ்நாட்டில் நிறுவனங்களை துவங்கவும், தொழில் முதலீடுகளை ஈர்க்கும் வகையிலும் அமெரிக்காவில் முதல்வர் ஸ்டாலின் அரசுமுறை பயணம் மேற்கொண்டுள்ளார். இந்த பயணத்தின்போது, சான் பிரான்சிஸ்கோவில் முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில், நோக்கியா உள்ளிட்ட 6 நிறுவனங்களுடன் ரூ.900 கோடி முதலீட்டில் 4,100 பேருக்கு வேலை வாய்ப்பு அளிக்கும் வகையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.
தமிழகத்தில் செயற்கை நுண்ணறிவு ஆய்வகங்கள் அமைக்க கூகுள் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. 500 பேருக்கு வேலை அளிக்கும் வகையில் ரூ.400 கோடியில் செங்கல்பட்டு மாவட்டத்தில் புதிய தொழிற்சாலை அமைக்க ஓமியம் நிறுவனத்துடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இதன் தொடர்ச்சியாக, தமிழ்நாட்டில் ரூ. 2,000 கோடி முதலீட்டில் வளர்ச்சி மற்றும் உலகளாவிய உதவி மையம் (Development and Global Support Centre) மற்றும் உற்பத்தி மையம் அமைக்க ட்ரில்லியன்ட் (Trilliant) நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
கடந்த செப்டம்பர் 4 ஆம் தேதி சிகாகோவில் முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் இதற்கான ஒப்பந்தம் கையெழுத்தானது. இந்நிகழ்வில், ட்ரில்லியன்ட் நிறுவன தலைமை வணிக அலுவலர் மைக்கேல் ஜே மார்டிமர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஸ்மார்ட் கிரிட், ஸ்மார்ட் நகரங்கள், இண்டஸ்ட்ரியல் இன்டர்நெட் ஆஃப் திங்ஸ் ஆகியவற்றுக்கான தீர்வுகளை வழங்கும் முன்னணி நிறுவனமான ‘ட்ரில்லியன்ட்’, அமெரிக்காவின் வடக்கு கரோலினா மாநிலம் கேரி நகரை தலைமையிடமாக கொண்டது.
இந்நிலையில் ட்ரில்லியன்ட் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் போட்டுள்ளது குறித்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ள பதிவில், ‘ட்ரில்லியன்ட் நிறுவனம் தமிழ்நாட்டில் அதன் உற்பத்தி அலகு, வளர்ச்சி மற்றும் உலகளாவிய மையத்தை அமைக்க ரூ.2,000 கோடியில் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டேன்.
‘நைக்கி’ நிறுவனத்துடன் அதன் காலணி உற்பத்தியை விரிவுபடுத்துவது, சென்னையில் தயாரிப்பு, உருவாக்கம், வடிவமைப்பு மையம் அமைக்க சாத்தியக்கூறுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினேன். ஏற்கனவே தமிழ்நாட்டில் ‘ஆப்டம்’ நிறுவனத்தில் 5 ஆயிரம் பேர் வேலை செய்து வரும் நிலையில், அந்நிறுவனம் சுகாதார துறைக்கான திறமையாளர்களை உருவாக்க திட்டமிட்டுள்ளது. திருச்சி, மதுரையில் தங்கள் செயல்பாடுகளை விரிவுபடுத்துவது குறித்து பரிசீலிக்குமாறு கேட்டுக் கொண்டேன்’. இவ்வாறு தெரிவித்துள்ளார்.
Chief Minister M.K. Stalin’s US visit leads to MoUs with companies like Trilliant and Nokia, investing Rs 2,000 crore and creating 4,100 jobs in Tamil Nadu. Key partnerships aim to boost job creation and industrial growth.