இயக்குனர் நெல்சன் திலீப்குமாரின் முந்தைய படமான பீஸ்ட் கடந்த 2022 ஆம் ஆண்டு விஜய் நடிப்பில் வெளியானது. ரசிகர்களின் எதிர்பார்ப்பை முழுமையாக பூர்த்தி செய்யாத இப்படம் கலவையான விமர்சனங்களையே பெற்றது. ஆனால், அடுத்த ஆண்டு வெளியான ரஜினிகாந்தின் ‘ஜெயிலர்’ படத்தை இயக்கி பீஸ்ட்டால் இழந்த பெயரை மீட்டெடுத்தார் நெல்சன்.
அதிக வசூல் செய்த இந்தியப் படங்களில் ஒன்றாக ஜெயிலர் சாதனை படைத்தது. இப்படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் துவங்கவுள்ளது. இதற்காக நெல்சன் திலீப்குமாருடன் மீண்டும் ரஜினிகாந்த் இணைகிறார். இப்படத்திற்காக இயக்குனர் நெல்சனுக்கு ரூ.60 கோடி சம்பளம் வழங்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த செய்தி இன்னும் அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை.
இது உண்மையானால் நெல்சனின் திரை வாழ்க்கையில் அதிக சம்பளம் பெற்ற படமாக ‘ஜெயிலர் 2’ மாறும்.
மேலும், ஜெயிலரை போலவே இரண்டாம் பாகத்திலும் மோகன்லால் மற்றும் சிவராஜ்குமார் ஆகியோர் கெஸ்ட் தோற்றத்தில் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. அத்துடன் மற்றொரு பாலிவுட் பிரபலம் இப்படத்தில் நடிக்கவுள்ளார்.
‘ஜெயிலர்’ படத்தில் ரஜினியுடன் விநாயகன், ரம்யா கிருஷ்ணன், தமன்னா பாட்டியா, வசந்த் ரவி, மிர்னா மேனன் மற்றும் யோகி பாபு உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். முதல் பாகம் தமிழ்நாட்டில் மட்டும் ரிலீசுக்கு முந்தைய வியாபாரத்தில் 62 கோடியும், ரிலீசுக்கு பிந்தைய வணிகத்தில் 127.6 கோடியும் வசூலித்தது. உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி பாக்ஸ் ஆபிஸில் மட்டும் 650 கோடி ரூபாய் வசூலித்து சாதனை படைத்தது.
முன்னணி இளம் இயக்குனரான நெல்சன் திலீப்குமாருக்கு, ரஜினிகாந்தின் ஜெயிலர் படம்தான் மிகப்பெரிய பிரேக்கை கொடுத்தது. சூப்பர் ஸ்டார் மாஸ் படங்களுக்கு சிறந்த முன்னுதாரணமாக அமைந்த இப்படம் கேரளா உள்ளிட்ட பிற மாநிலங்களிலும் மாபெரும் வரவேற்பை பெற்றது. ஜெயிலர் படத்தில் நடித்ததற்காக ரஜினிகாந்த் ரூ.100 கோடி சம்பளம் வாங்கியதாக கூறப்படுகிறது
இதுதவிர, படத்தின் வெற்றிக்குப் பிறகு ரஜினிக்கு ரூ.110 கோடி காசோலையை ரஜினிகாந்துக்கு சன்பிக்சர்ஸ் கொடுத்தது. இதன் மூலம் ரஜினிகாந்த் மொத்தமாக 210 கோடி ரூபாய் சம்பளம் இப்படத்திற்காக பெற்றுள்ளார். இதன் மூலம் நாட்டிலேயே அதிக சம்பளம் வாங்கும் நடிகர் என்ற பெருமையை ரஜினிகாந்த் பெற்றார். இதுதவிர ஜெயிலர் வெற்றிக்காக ரூ.1.25 கோடி மதிப்புள்ள புதிய பிஎம்டபிள்யூ எக்ஸ்7 காரையும் ரஜினிகாந்துக்கு பரிசாக வழங்கினார் கலாநிதிமாறன்.
அதே போல் ஜெயிலர் இயக்குனருக்கு காசோலை ஒன்றையும்,புதிய போர்ஷே காரையும் பரிசாக வழங்கினார் தயாரிப்பாளர் கலாநிதி மாறன். 2023 ஆம் ஆண்டில் அதிக வசூல் செய்த தமிழ்ப்படம் என்ற பெருமை ஜெயிலருக்கு உள்ளது. இதன் காரணமாகவே ‘ஜெயிலர் 2’ படத்திற்காக நெல்சனுக்கு ரூ.60 கோடி சம்பளமாக வழங்கப்படலாம் என கூறப்படுகிறது.
Explore the exciting developments in Jailer 2, directed by Nelson Dilipkumar. Discover the rumored Rs 60 crore fee, potential cast, and intriguing plot elements featuring Rajinikanth, Yogi Babu, and more.