டெல்லியில் வரும் ஜூலை 27ஆம் தேதி நிதி ஆயோக் நடைபெறவுள்ளது. இதில் அனைத்து மாநில முதல்வர்களும் கலந்து கொள்ள வேண்டும் என்று பிரதமர் மோடி அழைப்பு விடுத்துள்ளார். இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளப் போவதில்லை என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இது தொடர்பாக இன்று மாலை செய்தியாளர்களை சந்தித்து பேசியவர், ஒன்றிய அரசின் நிதிநிலை அறிக்கையை ஒட்டி நீண்ட அறிக்கையை கொடுத்துள்ளேன்.
அதனை ஒட்டி முக்கிய முடிவையும் எடுத்துள்ளேன். அதற்காக தான் உங்கள் அனைவரையும் பார்க்க வந்தேன். ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று தாக்கல் செய்துள்ள பட்ஜெட் மிகப்பெரிய ஏமாற்றத்தை அளித்துள்ளது. மூன்றாவது முறையும் வாக்களித்த மக்களுக்கு இந்த பாஜக அரசு எந்த நன்மையும் செய்யவில்லை என்பது தெளிவாக தெரிகிறது.
ஒன்றிய பட்ஜெட்டில் தமிழ் நாட்டிற்கு என்னென்ன திட்டங்களை அறிவிக்க வேண்டும் என்று சில நாட்களுக்கு முன்பு அறிக்கையாக வெளியிட்டேன். சென்னை மெட்ரோவிற்கு நிதியை விடுவிக்க வேண்டும். கோவை, மதுரை மெட்ரோ ரயில் திட்டங்களுக்கு ஒப்புதல்களை விரைந்து வழங்க வேண்டும். தமிழ்நாட்டில் அறிவிக்கப்பட்டுள்ள ரயில்வே திட்டங்களை விரைந்து செயல்படுத்த நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்.
தாம்பரம் – செங்கல்பட்டு இடையில் மேம்பால விரைவு சாலை ஒப்புதலை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. ஆனால் எதையுமே நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிக்கவில்லை. ஒரு சில மாநிலங்களுக்கு மட்டும் சிறப்பு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. அறிவித்திருக்கிறார்களே தவிர, அதையும் நிறைவேற்றுவார்களா? என்பது தெரியவில்லை.
தமிழ்நாட்டிற்கான எந்தவித சிறப்பு திட்டமும் பட்ஜெட்டில் இல்லை. தமிழ்நாடு என்ற சொல்லே பட்ஜெட்டில் இடம்பெறவில்லை. அதுமட்டுமின்றி ஒன்றிய அரசின் சிந்தனையில் கூட நாம் இல்லை. இந்த பட்ஜெட்டில் நீதி இல்லை. அநீதி தான் இருக்கிறது. வரும் 27ஆம் தேதி பிரதமர் மோடி தலைமையில் நிதி ஆயோக் கூட்டம் நடைபெறவுள்ளது. அதில் நானும் பங்கேற்க திட்டமிட்டு, அதற்காக தயாராகி வந்தேன்.
ஆனால் பட்ஜெட்டில் தமிழ்நாடு புறக்கணிக்கப்பட்டுள்ளதை போல் நிதி ஆயோக் கூட்டத்தை நானும் புறக்கணிக்க உள்ளேன். நாளைய தினம் நம்முடைய எம்.பிக்கள் டெல்லியில் போராட்டம் நடத்தவுள்ளனர். அதற்கு நாங்கள் அனுமதியும் அளித்துள்ளோம். இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
Tamil Nadu Chief Minister M.K. Stalin announces boycott of Niti Aayog meeting, citing dissatisfaction with Union Budget 2024 and lack of focus on Tamil Nadu’s projects.