தமிழ்நாட்டில் மின் கட்டணம் உயர்த்தப்படுவதாக அரசு அறிவித்துள்ளது. ஜூலை 1 ஆம் தேதி முதல் இந்த மின்கட்டண உயர்வு நடைமுறைக்கு வருவதாக தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் தெரிவித்துள்ளது. ஆனால் இதற்கான அறிவிப்பு நேற்றைய தினம் ஜூலை 15ம் தேதி தான் வெளியாகியுள்ளது. இதன் மூலமாக மின்சார கட்டணம் 4 சதவிகிதத்துக்கு மேல் உயர்த்தப்பட்டுள்ளன.
தற்போது புதிய மின்கட்டண உயர்வின் படி, 400 யூனிட் வரை மின்சாரம் பயன்படுத்தும் வீடுகளுக்கு யூனிட் ஒன்றுக்கு ரூ.4.60 வசூலிக்கப்பட்ட நிலையில், இனி ஒரு யூனிட்டுக்கு ரூ.4.80 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இதேபோல் 401 யூனிட் முதல் 500 யூனிட் வரை பயன்படுத்தப்படும் மின்சாரத்துக்கு ரூ.6.15 வசூலிக்கப்பட்ட நிலையில் தற்போது அது ரூ.6.45 அதிகரிக்கப்பட்டுள்ளது.
மேலும் 501 முதல் 600 யூனிட் வரை மின்சாரத்தை பயன்படுத்தும் பயனாளர்களுக்கு யூனிட் ஒன்றுக்கு ரூ.8.15 வசூலிக்கப்பட்ட நிலையில் ரூ.8.55 அதிகரிக்கப்பட்டுள்ளது. 601 முதல் 800 யூனிட் வரை பயன்படுத்துபவர்களுக்கு ஒரு யூனிட்டுக்கு ரூ.9.20 என்ற நிலையில் இருந்து ரூ.9.65 ஆக உயர்த்தப்பட்டுள்ளது.
801 முதல் 1,000 யூனிட் வரையான மின்சார பயன்பாட்டுக்கு யூனிட் ஒன்றுக்கு ரூ.10.20 கட்டணமாக இருந்த நிலையில், அது தற்போது ரூ.10.70 உயர்த்தப்பட்டுள்ளது. 1000 யூனிட்டுக்கு மேல் வீடுகளின் பயன்படுத்தப்படும் மின்சாரத்துக்கு ரூ.11.80 கட்டணமாக வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அடுக்குமாடி குடியிருப்புகளுக்கான மின் கட்டணம் யூனிட் ஒன்றுக்கு ரூ.8.15 என்ற கட்டணத்தில் இருந்து ரூ.8.55 உயர்த்தப்பட்டுள்ளது.
ரயில்வே, ராணுவ வீரர் குடியிருப்புகளுக்கான மின் கட்டணம் யூனிட் ஒன்றுக்கு ரூ.8.15 காசுகளில் இருந்து ரூ.8.55 காசுகளாக உயர்த்தப்பட்டுள்ளது. 50 யூனிட்டுக்கு மேல் வணிக பயன்பாட்டுக்கான மின் கட்டணம் ஒரு யூனிட் ரூ. 9.70 என்ற நிலையில் இருந்து ரூ.10.15 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. குடிசை, குறு நிறுவன மின் கட்டணம் 500 கிலோ வாட்டுக்கு மேல் யூனிட் ஒன்றுக்கு ரூ.6.95 அதிகரிக்கப்பட்டுள்ளது. விசைத்தறிகளுக்கு 500 கிலோ வாட்டுக்கு மேல் யூனிட் ஒன்றுக்கு ரூ.8 என கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 2022ம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் மின் கட்டணம் 30 சதவீதத்துக்கு மேல் உயர்த்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து, 2023ம் ஆண்டு ஜூலை மாதம் 2.18 சதவீதம் கட்டணம் உயர்த்தப்பட்டது. தற்போது மீண்டும் 2024ம் ஆண்டில் 4.83 சதவீத அளவில் மின் கட்டணத்தை அதிகரிப்பதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது.
கட்டுமானப் பணிகளுக்கான மின்சார கட்டணம் ஒரு கிலோவாட்டுக்கு ரூ.12.25 யிலிருந்து ரூ.12.85 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த புதிய மின்சார கட்டண உயர்வு பொதுமக்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஒன்றிய அரசின் மின் அமைச்சக வழிகாட்டுதலின் படி, விநியோக முறையை வலுப்படுத்தும் திட்டத்தின் கீழ், ஒன்றிய அரசின் நிதியை பெற ஆண்டுதோறும் மின் கட்டணம் திருத்தம் செய்ய வேண்டும் என்பது நிபந்தனை. இதன் அடிப்படையிலே தற்போது தமிழ்நாட்டில் மின்சார கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Learn about the recent electricity tariff hike in Tamil Nadu effective from July 1, 2024, impacting residential, commercial, and industrial users.