ஜோஹோவின் இணை நிறுவனர் மற்றும் தலைமை விஞ்ஞானி ஸ்ரீதர் வேம்பு, MapMyIndia-வின் வழிசெலுத்தல் செயலியான மேப்பிள்ஸ் செயலியை பாராட்டி, அதனை “மிகவும் அருமை” என்று கூறியுள்ளார். மேலும் இது கூகுள் மேப்பை விட நீண்ட பல ஆண்டுக்கால ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டை பிரதிபலிக்கிறது என்றும் குறிப்பிட்டுள்ளார். கடந்த அக்டோபர் 12, 2025 அன்று எக்ஸ் தளத்தில் தனது பாராட்டுகளைப் பகிர்ந்து கொண்ட அவர், ரோஹன் வர்மா மற்றும் MapMyIndia குழுவிற்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்தார்.

அக்டோபர் 11 அன்று Mappls-இன் அம்சங்களை ரயில்வே, தகவல் மற்றும் ஒளிபரப்பு, மின்னணுவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் எடுத்துரைத்தார். இதனையடுத்து இந்தப் பாராட்டு கிடைத்தது. அமைச்சர் இந்த செயலியை நேரடியாக அனுபவித்தார். அதன் 3D சந்திப்பு காட்சிகள், மேம்பாலங்கள், சுரங்கப்பாதைகள் மற்றும் ரவுண்டானாக்களின் முன்னோட்டங்கள், அத்துடன் வேக வரம்புகள், விபத்து ஏற்படக்கூடிய பகுதிகள், கூர்மையான வளைவுகள், வேகத் தடைகள், போக்குவரத்து சிக்னல்கள் மற்றும் போக்குவரத்து கேமரா இடங்களுக்கான நிகழ்நேர ஓட்டுநர் எச்சரிக்கைகள் ஆகியவற்றை இதில் துல்லியமாக அறிவது குறித்து சுட்டிக்காட்டினார்.
மேப்பிள்ஸ், வாகன வகை மற்றும் எரிபொருள், சுங்கச்சாவடிகள் உட்பட, பயணச் செலவுகளைக் கணக்கிடவும் பயனர்களுக்கு உதவுகிறது. மேலும் ஃபாஸ்டேக் வருடாந்திர பாஸுடன் ஒருங்கிணைக்கிறது. துல்லியமான முகவரி இருப்பிடத்தை அறியவும், பயனர்கள் ஆபத்தான பகுதிகளைத் தவிர்க்கவும், வேக வரம்புகளுக்குள் இருக்கவும் உதவுகிறது.
ரயில்வே துறையில் மேப்பிள்ஸின் ஜிஐஎஸ் பயன்பாடுகளைப் பயன்படுத்த மேப்ள்ஸுடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட அரசாங்கம் திட்டமிட்டுள்ளது. இது பொது உள்கட்டமைப்பில் உள்நாட்டு தொழில்நுட்பத்தை பரவலாக ஏற்றுக்கொள்வதைக் குறிக்கிறது. உற்பத்தி-இணைக்கப்பட்ட ஊக்கத்தொகை (பிஎல்ஐ) திட்டத்தின் கீழ் தயாரிக்கப்பட்ட ஸ்மார்ட் போன்களில் மேப்ள்ஸை முன்கூட்டியே நிறுவுவதை கட்டாயமாக்குமாறு அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளது மேப்ளஸ்.
35 மில்லியனுக்கும் அதிகமான முறை பதிவிறக்கம் செய்யப்பட்ட மேப்பிள்ஸ், “சுதேசி தொழில்நுட்பத்தை” வலியுறுத்துகிறது. இது ஜங்ஷன், டோர்-லெவல் நேவிகேஷன், நேரடி போக்குவரத்து சிக்னல் டைமர்கள், பாதுகாப்பு மற்றும் வேக எச்சரிக்கைகள், கட்டண மதிப்பீடுகள், மேப்ள்ஸ் பின், டிஜிபின் மற்றும் அந்தந்த மாநில மொழி ஆதரவு போன்ற அம்சங்களை வழங்குகிறது. இந்த செயலியை ஏற்கனவே DIGIPIN, காவல் துறைகள் மற்றும் GSTN, CBDT போன்ற வரி நிறுவனங்கள் உட்பட கிட்டத்தட்ட 10 அரசு துறைகள் பயன்படுத்துகின்றன. இருப்பினும் MapMyIndiaவின் ஆண்டு வருவாயான ரூ.463 கோடியில் அரசு வணிகம் 20 சதவிகிதத்துக்கும் குறைவாகவே உள்ளது.
zoho’s sridhar vembu calls mapmyindia’s mappls “awesome,” highlighting years of r&d and indigenous innovation compared to google maps.