இந்துஜா குழுமத்தின் ஒரு பகுதியாக இருக்கும் அசோக் லேலேண்ட், 2027 ஆம் ஆண்டுக்குள் இந்தியாவில் தனது முதல் ஹைட்ரஜன் மூலமாக இயங்கும் லாரிகளை வணிக ரீதியாக அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. இந்த தொழில்நுட்பம் விற்பனைக்கு கொண்டு வரும் அளவிற்கு வந்துள்ளது என்பதை நிர்வாக இயக்குநரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான ஷேனு அகர்வால் உறுதிப்படுத்தியுள்ளார். இது மின்சார வாகனங்களுக்கு (EVs) பிறகு இந்தியாவின் வாகன நிலப்பரப்பில் அடுத்த பெரிய மாற்றத்தை உண்டாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
போக்குவரத்துக்கு ஹைட்ரஜனின் நன்மைகள்
ஹைட்ரஜன் தூய்மையான ஆற்றல் வடிவமாகக் கருதப்படுகிறது. இது ஒரு துணைப் பொருளாக தண்ணீரை மட்டுமே உற்பத்தி செய்கிறது. அதன் அதிக ஆற்றல் அடர்த்தி மற்றும் இலகுவான எடை நீண்ட தூர வாகனங்களுக்கு ஏற்றதாக அமைகிறது. வழக்கமான எரிபொருட்களுடன் ஒப்பிடும்போது 50% வரை குறைந்த எரிபொருள் பயன்பாட்டை வழங்குகிறது.

அரசாங்கத்தின் ஆதரவு
வாகனத் துறையில் ஹைட்ரஜன் பயன்பாட்டை ஊக்குவிப்பதை அரசு நோக்கமாகக் கொண்டுள்ளது. செப்டம்பர் 22 முதல் அமலுக்கு வரும் புதிய ஜிஎஸ்டி சீர்திருத்தத்தின் கீழ், ஹைட்ரஜன் அடிப்படையிலான வாகனங்கள் உட்பட எரிபொருள், செல், வாகனங்கள் மீதான ஜிஎஸ்டி 12% இலிருந்து 5% ஆகக் குறைக்கப்பட்டுள்ளது. இது உற்பத்தியாளர்களுக்கு வசதியாக அமைந்துள்ளது.
அசோக் லேலண்டின் திட்டம்
அசோக் லேலண்ட் எட்டு ஆண்டுகளுக்கு முன்பு மின்சாரப் பேருந்துடன் மின்சார வாகனத் துறையில் நுழைந்தது, அதன் பின்னர் இலகுரக மற்றும் கனரக மின்சார மற்றும் LNG லாரிகளாக விரிவடைந்துள்ளது. நிறுவனம் மின்சார வாகனங்களுக்கான பேட்டரி செல்களை தயாரிப்பதிலும் இறங்கியுள்ளது. நிறுவனம் EV, ஹைட்ரஜன் மற்றும் LNG முழுவதும் மாற்று பவர்டிரெய்ன்களை உருவாக்கியுள்ளது என்றும் தற்போது இந்த தொழில்நுட்பங்களை வணிகமயமாக்கத் தயாராக உள்ளதாகவும் என்றும் ஷேனு குறிப்பிட்டுள்ளார்.
ரிலையன்ஸ் நிறுவனத்துடன் கூட்டணி
அசோக் லேலண்ட் ஹைட்ரஜன் உள் எரிப்பு இயந்திரம் (H2-ICE) லாரிகளுக்காக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸுடன் இணைந்து பணியாற்றியுள்ளது. இதை 2023 ஆம் ஆண்டில் பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார். அதே ஆண்டில், அதானி குழுமமும் கனடாவின் பல்லார்ட் பவரும் அசோக் லேலண்டுடன் இணைந்து எரிபொருள் செல் மின்சார லாரிகளை உருவாக்கின.
தேசிய ஹைட்ரஜன் பைலட்டுகள்
தேசிய பசுமை ஹைட்ரஜன் மிஷனின் கீழ், பேருந்துகள் மற்றும் லாரிகளில் ஹைட்ரஜன் பயன்பாட்டிற்கான ஐந்து பைலட் திட்டங்களுக்கு அரசாங்கம் ஒப்புதல் அளித்துள்ளது. இதில் 37 வாகனங்கள், 15 எரிபொருள் செல் மற்றும் 22 H2-ICE – ஒன்பது ஹைட்ரஜன் எரிபொருள் நிரப்பும் நிலையங்களுடன் 10 வழித்தடங்களில் இயங்குகின்றன. ஒன்றிய அரசிடமிருந்து ரூ. 208 கோடி நிதி உதவியுடன், இந்த முன்னோடித் திட்டங்கள் 18-24 மாதங்களுக்குள் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது இந்தியாவில் ஹைட்ரஜன் பயன்பாட்டை துவங்குதற்கான அடித்தளத்தை அமைக்கிறது.
Ashok Leyland plans to commercially launch its first hydrogen-powered trucks in India by 2027, marking the next phase in green mobility.