முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையிலான தமிழ்நாடு அரசு, நேரு உள்விளையாட்டு அரங்கில் இசைஞானி இளையராஜாவுக்கான பாராட்டு விழாவை பிரம்மாண்டமாக நடத்தியுள்ளது. இசையமைப்பாளருடன் நீண்டகாலமாக இணைந்து பணியாற்றிய உச்ச நட்சத்திரங்களாக நடிகர்கள் ரஜினிகாந்த் மற்றும் கமல்ஹாசன் ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
இளையராஜாவின் நம்பிக்கையை நினைவு கூர்ந்த ரஜினிகாந்த்
நிகழ்ச்சியில் பேசிய ரஜினிகாந்த், “இன்றைய திரைப்படம் இளையராஜாவின் பாடலைக் கொண்டிருந்தால் வெற்றி பெறும்” என்று கூறினார். ‘ராஜாதி ராஜா’ படத்தின் போது இளையராஜாவின் அசைக்க முடியாத நம்பிக்கையை பார்த்து ஆச்சரியப்பட்டதையும் வெளிப்படுத்தினார். இப்படம் வெள்ளி விழாவைக் கடந்து ஓட வேண்டும் அல்லது இனி ஒருபோதும் ஹார்மோனியம் வாசிக்கவோ அல்லது பாடவோ மாட்டேன் என்று கூறினார். இறுதியில், படம் 25 வாரங்களைத் தாண்டி, வெற்றிநடை போட்டது”. அப்போது, இசைஞானியின் அபார நம்பிக்கையால் மிகவும் ஈர்க்கப்பட்டதாக தெரிவித்தார் ரஜினிகாந்த்.
பாரத ரத்னா விருது வழங்க வலியுறுத்தல்
இந்த விழாவின் போது, இளையராஜாவின் ஐந்து தசாப்த கால இசைப் பங்களிப்பிற்காக அவருக்கு பாரத ரத்னா விருது வழங்குமாறு ஒன்றிய அரசை வலியுறுத்தியுள்ளார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின். சிறந்த இசைத் திறமையை கௌரவிக்கும் வகையில் இசையமைப்பாளரின் பெயரில் ஒரு மாநில விருதையும் வழங்கவுள்ளதாக அறிவித்துள்ளார். எதிர்கால சந்ததியினருக்கு மொழியின் சிறப்பை கொண்டு சேர்க்கும் நோக்கில், தமிழ் பாரம்பரிய இலக்கியத்தால் ஈர்க்கப்பட்ட இசையமைப்புகளை உருவாக்குமாறு இளையராஜாவை ஊக்குவித்துள்ளார் முதல்வர்.
நன்றி தெரிவித்த இளையராஜா
இந்த அங்கீகாரத்திற்காக இசைஞானி இளையராஜா முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களுக்கும். தமிழ்நாட்டு மக்களுக்கும் நன்றி தெரிவித்தார். ஒரு இசைக்கலைஞரை கௌரவிப்பதற்காக அரசே ஒரு விழாவை ஏற்பாடு செய்தது இதுவே முதல் முறை என்று குறிப்பிட்டார். தனது சிம்பொனிகளை இயற்றுவது, தமிழ் நாட்டுப்புற பாடல்களை உருவாக்குவது தொடர்பாகவும் உணர்வுபூர்வமாக சில விஷயங்களை பகிர்ந்துக் கொண்டார் இளையராஜா.
தமிழ் சினிமாவில் மரபு
தளபதி, முள்ளும் மலரும், ஜானி மற்றும் அவள் அப்படித்தான் உள்ளிட்ட ஏராளமான ரஜினிகாந்த் படங்களுக்கு இளையராஜா இசையமைத்துள்ளார். இதுபோன்ற ஏராளமான ஹிட் படங்களுக்கு இசையமைத்து இந்தியாவின் மிகவும் செல்வாக்கு மிக்க இசை மேதைகளில் ஒருவராக தனது இடத்தை உறுதிப்படுத்தினார் இளையராஜா.